பிரச்சனையை மாத்திரம் வைத்து அரசியல் செய்பவர்களை தீனி போட்டு வளர்த்துவிடுகின்ற செயற்பாட்டினையே சில திணைக்களங்கள் மேற்கொள்கின்றன - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!
பிரச்சனையை மாத்திரம் வைத்து அரசியல் செய்பவர்களை தீனி போட்டு வளர்த்துவிடுகின்ற செயற்பாட்டினையே சில திணைக்களங்கள் மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதி மற்றும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை கட்டியெழுப்பும் செளபாக்கியத்தின் நோக்கு "உங்களுக்கு நாடு - நாட்டுக்கு நாளை" எனும் உயரிய சிந்தனைக்கு அமைவாக, பல நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் ஊடாக நாடு பூராகவுமுள்ள க.பொ.த சாதாரண தரத்திற்கு குறைவான கல்வியினை கற்றுள்ள மற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய தவறியுள்ள
இளைஞர் யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்கி நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அமைவாக நியமனக்கடிதங்களை கட்டம் கட்டமாக வழங்கிவைக்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதற்கு அமைவாக இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சதாசிவம் வியாழேந்திரனது சிபாரிசிற்கமைவாக இரண்டாம் கட்டமாக 78 பேரிற்கான நியமனக்கடிதங்கள் இன்று 30.10.2021 ஆந் திகதி சனிக்கிழமை இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற நியமனக்கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்திருந்ததுடன், குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கிவைத்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், முற்போக்குத் தமிழர் கட்சியின் பிரதான இணைப்பாளர்கள் மற்றும் கட்சியின் கள இணைப்பாளர்கள், நியமனதாரிகளின் உறவினர்கலென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபாரிசிற்கு அமைவாக 199 இளைஞர் யுவதிகளுக்கான நியமனக்கடிதங்கள்
முதற்கட்ட நியமனத்தின் போது
வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் இதன்போது மேலும் உரையாற்றுகையில்,
இந்த மாவட்டத்திலே நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது, பிரச்சனைகள்தான் தேவை, தேவைகள்தான் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளுக்காக இரண்டு விதமான அரசியல் தலைமைத்துவங்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். அதில் ஒன்று பிரச்சனையை மாத்திரம் வைத்து அரசியல் செய்பவர்கள் இன்னொன்று பிரச்சனை இருப்பதை அறிந்து அந்த பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முனைபவர்கள் இந்த இரண்டுவிதமான அரசியல் தலைமைத்துவங்களை நாங்கள் இந்த மாவட்டத்திலும் இந்த நாட்டிலும் பார்க்கின்றோம்.
அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்கட்சியாக இருந்தாலும் சரி இரண்டுவிதமான பிரிவினர் இருக்கின்றார்கள். ஒன்று தனிய பிரச்சனையை மாத்திரம் வைத்து அரசியல் நடத்துபவர்கள். இன்னொரு பிரிவினர் பிரச்சனையை அறிந்து அதற்கான தீர்வை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இலங்கையிலே சில திணைக்களங்கள் இருக்கின்றன பிரச்சனையை வைத்து அரசியல் செய்கின்ற அரசியல் தலைமைத்துவங்களுக்கு தீன் போடுகின்ற திணைக்களங்கள். ஒன்று தொல் பொருள் திணைக்களம், இன்னொன்று வன இலாகா மற்றயது வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மகாவலி இப்படியான திணைக்களங்கள் பிரச்சனையை மாத்திரம் வைத்து அரசியல் செய்பவர்களை வளர்த்துவிடுகின்ற திணைக்களங்களாகத்தான் இந்த இலங்கையிலேயே இருக்கின்றது.
வன இலாகா திணைக்களத்தின் பிரச்சனை மட்டக்களப்பிற்கு மாத்திரம் இல்லை. இலங்கையில் சுமார் 19 மேற்பட்ட மாவட்டங்களில் இந்த பிரச்சனை இருக்கின்றது. வனஜீவராசிகள் திணைக்கள பிரச்சனையும் 19 மேற்பட்ட மாவட்டங்களில் இருக்கின்றது. வனஜீவராசிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற இராஜாங்க அமைச்சர் அம்பாரையில் இருக்கின்றார் அவர் கூறுகின்றார் அவருக்கும் அவருடைய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு வருகின்றது என்று ஆனால் அவர் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றார். ஆனால் அந்த திணைக்களம் சட்டத்தின் பிரகாரம் தன்னுடைய வேலைகளை ஆரம்பிக்க நினைக்கின்றது. ஆகவே பிரச்சனையை மாத்திரம் வைத்தி அரசியல் செய்பவர்களுக்கு தடி எடுத்து கொடுப்பவர்கள் போன்றுதான் நிலைப்பாடுகள் காணப்படுகின்றது.
ஆனால் இந்த திணைக்களங்களுக்கான சட்டங்கள் அனைத்தும் அவ்வாறே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. வன இலாகாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் போன்ற இந்த கட்டமைப்பிற்குள் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள் நேரடியாக கொழும்பில் இருந்தே வேலை செய்கிறார்கள்.
இந்த திணைக்களங்கள் எல்லாம் நேரடியாக கொழும்பில் இருந்து வேலை செய்வதனால் இங்கு மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் வருகின்றது. அந்த முரண்பாடுகளை வைத்து சிலர் அரசியல் செய்கின்றார்கள். இந்த இடத்தில்தான் நாங்கள் அதை எப்படி தீர்த்துக் கொடுக்கலாம் என சிந்திக்க வேண்டும்.
ஆகவே எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே இப்பொழுது இருக்கின்ற ஒரு பாரிய பிரச்சனை இந்த வனஜீவராசிகளின் பிரச்சனை. அதிலும் குறிப்பாக யானை பிரச்சனை உங்களுக்கு தெரியும் இப்பொழுது யானைகள் நகரை கூட நெருங்கிவிட்டது. இலங்கையில் சுமார் 7500 இற்கு மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. எமது மாவட்டத்தில் கடந்த 2020 நடுப்பகுதியிலே கிட்டத்தட்ட 415 யானைகள் உள்நூழைந்திருக்கின்றன.
எமது மாவட்டத்திற்கு 15 இடங்களால் யானைகள் உள்ளே வருகின்றது. செங்கலடி நகர் பகுதியில் 50 மீற்றர் தூரத்தில் யானை வந்து நிற்கின்றது. சிலர் அதை வீடியோ எடுத்து டிக் டொக் போடுகின்றார்கள் ஆனால் அந்த பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அச்சத்தில் வாழ்கின்றார்கள். கடந்து ஓரிரு வாரங்களிலே அந்த பகுதிகளில் கிட்டத்தட்ட நான்கு பேர் யானைகளால் அடித்து கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறுதான் மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமிடையில் போராட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றது. இதெல்லாம் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை வைத்தே ஒரு கூட்டம் அரசியல் செய்கின்றது.
இந்த விடையங்கள் இந்த அரசாங்கத்தில் வந்த பிரச்சனைகள் அல்ல. இவை தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. தொல்பொருள் பிரச்சனையும் இந்த அரசாங்கத்தில் வந்த பிரச்சனைகள் அல்ல. அது கடத த்த காலம் தொடக்கம் இருந்து வருகின்றது. குறிப்பாக எங்களுடைய தமிழ் தலைமைகள் நல்லாட்சிக்கு முட்டுக் குடுத்துக்கொண்டு வந்த காலகட்டத்திலே மட்டக்களப்பிலே 600 இடங்கள் தொல்பொருளிற்காக அடையாளப்படுத்தப்பட்டன. அப்போது இவர்கள் யாரும் வீதிக்கு இறங்கி போராடல்லை. காரணம் இவர்கள் நல்லாட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். வரவு செலவுத்திட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் நல்லாட்சியை பாதுகாத்துக்கொண்டு இருந்ததாலும் அந்த அரசோடு ஒரு ஒப்பந்தத்தில் இருந்ததால் இவர்களால் எதிர்க்க முடியவில்லை.
இங்கு பிரச்சனைகளுக்கான தீர்வும் இல்லை அபிவிருத்தியும் இல்லை இவ்வாறாக ஒன்றுமே இல்லாம சும்மா பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு எமது வாக்குகளை அளிப்பதனால் எமது சமூகம்தான் பின்னடைவை சந்திக்கும். அதே வேளை 107 கிலோ மீற்றருக்கு யானை வேலி அமைப்பதற்கான அனுமதி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. யானை வேலிகள் மிக விரைவில் அமைக்கப்படவிருக்கின்றன. ஒரு மாதத்திற்கு 7000 வெடிகளை கோரியிருக்கின்றோம். ஆளணி வளம் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பணிக்காகவே உங்களை நியமித்துள்ளோம். இது ஒரு அரச வேலை வாய்ப்பு என்பதற்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்ய கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாக கருதி தங்களது கடமைகளை நீங்கள் ஆற்றவேண்டும் என்றார்.