புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமற்போயிருந்த சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல்வகுமார் (வயது-37) என்பவரே இன்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழிலுக்காக இன்று பிற்பகல் கடலுக்குச் சென்ற ஊரி கடற்றொழிலாளர்கள் கடலில் சடலத்தை அவதானித்து அதுதொடர்பாக கிராம சேவையாளர் மயூரனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் மூலம் சுழிபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறவினர்களும் காரைநகர் ஊரி கடற்றொழிலாளர்களும் கடலுக்குச் சென்று சடலத்தை கரைக்குக் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.