இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் உரிய வகையில் எல்லைதாண்டி வந்தவர்களை கட்டுப்படுத்தினால் தமது வாழ்வாதாரத் தொழிலை சிறந்த முறையில் செய்ய முடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
இந்திய -இலங்கை அரசாங்கங்கள் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி எல்லை மீறி தமது பகுதிகளில் வருகின்ற மீன்பிடி படகுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தமக்கு வாழ்வாதாரத் தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோரி இந்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.