அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 273 இடங்களில் வெற்றிபெற்று 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் தேர்வாகவுள்ளனர்.
இதேவேளை, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 284 இடங்களையும், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களையும் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, அமெரிக்க தேர்தலில் ‘நானே அதிக அளவில் வென்றேன்’ என்ற ஒற்றை வரியை தனது ருவிற்றர் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்தப் பதிவை நீக்கியபின்னர், மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக கூறியுள்ளார்.