நம்பிக்கையுடன் ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவையை உணர்ந்த நாங்கள், அதனை செயற்படுத்துவதற்கு முனைப்புடன் இருக்கிறோம் என வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம்செய்த அவர், வன்னி மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “ஊடக அமைச்சினைப் பொறுப்பேற்று குறுகிய காலப்பகுதிக்குள் வடபகுதிக்கு வருகைதந்து இங்குள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளோம்.
எதிர்காலத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய ஒரு தேவைப்பாடு இருப்பதை உணர்ந்த நாங்கள் அதனை செயற்படுத்துவதற்கு முனைப்புடன் இருக்கிறோம்.
கடந்த கால அனுபங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அனைத்து ஊடகவியலாளர்களும் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன.
உங்களது நலன்களை முன்னிறுத்தி இந்த அமைச்சிற்கும், இராஜாங்க அமைச்சிற்கும் பிரத்தியேகமான ஏற்பாடுகளைச் செய்து, அவற்றை துரிதமாக உங்கள் கரங்களில் சேர்ப்பிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ளார்.
அத்துடன், எந்தப் பகுதியைச் சேர்ந்தாலும் ஊடகவியலாளர்கள் பொதுவானவர்களாகவே காணப்படுகின்றார்கள். அதுபோலவே, அவர்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்களும் பொதுவான முறையில் அனைவருக்கும் சமனாகக் கிடைக்கும்.
ஊடகவியலாளர்களுக்கான காணி தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நான் முன்மொழிகின்ற விடயம் என்னவெனில் எமது நாட்டில் சனத்தொகை பெருகுவதற்கெற்ப காணிகள் பெருவதில்லை. எனவே, ஒவ்வொருவரும் கேட்கின்ற காணிகளை வழங்குவது சாத்தியமான விடயமில்லை.
விருத்தியடைந்த நாடுகளில் தொடர்மாடி வீடுகளை அமைக்கிறார்கள். எனவே, அவ்வாறான ஒரு திட்டத்திற்கான முன்மொழிவை நான் சமர்பிக்க விரும்புகின்றேன். வீட்டுப் பிரச்சினை என்பது பொதுவானதாக காணப்படுகின்றது. அந்தவகையில் இந்தச் சந்திப்பின் மூலம் நீங்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் தீர்த்துவைக்க முடியாதுபோனாலும் பல விடயங்களை சிறப்பாக செய்வதற்கான ஆரம்பமாக அமையும்” என்றார்.