முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சாட்சியமொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்னிலையாகவுள்ளார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கவனயீனமே தாக்குதல் இடம்பெறக் காரணமாக இருந்தது என குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே சர்வதேச புலனாய்வு அமைப்புக்களினால் தகவல் வழங்கப்பட்டபோதும் அதற்குப் பொறுப்பானவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமும் சாட்சியங்களைப் பதிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.