‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா-டயகமவித் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “19ஆவது திருத்தச் சட்டமூலம் இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது அறிவிக்கப்பட்டது. தற்போது அதனைச் செய்ய முற்படும்போது எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ’20’ இல் குறைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம். ஆனால், அந்த நடவடிக்கையை கைவிட முடியாது.
20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறிய பின்னர், நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்று இயற்றப்படும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அப்பணி நிறைவுசெய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இதேவேளை, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. எனவே, சட்டத்துக்கு மதிப்பளித்து ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும். எவராவது தவறிழைத்திருந்தால் தகுதி தராதரம்பாராது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.