மைக்கல் கொலினின் கவிதைகள் கடந்த கால யுத்த அவலங்களை பேசுகிறது. அவரது சமூகம் சார்ந்ந கவிதைகளிலும் தன்னுணர்ச்சிக் கவிதைகளிலும் இதனைக் காணலாம் என கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி A. A. நவரட்ணம் அடிகள் கடந்த ஞாயிறு நடைபெற்ற வி. மைக்கல் கொலினின் சிலுவைகளே சிறகுகளாய் கவிதை நூல் வெளியீட்டில் தலைமையுரை ஆற்றும் போது குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் மைக்கல் கொலின் தொன்மங்களுக்கூடாக சமூக சிந்தனைகனை வெளிப்படுத்துவதில் அண்மைக்காலமாக மும்முரமாக இயங்கி வருகிறார்.அவரது பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் போலவே இதில் உள்ள சில கவிதைகள் சிறுகதைகளாகவே அமைந்துள்ளன என்றார்.
பேராசிரியர் மெளன குரு
அவர்கள் தனதுரையில் மைக்கல் கொலின் ஒரு பத்திரிக்கையாளராக,சஞ்சிகையாளரா க சிறுகதையாளராக,கவிஞராக அறியப் பட்டவர். அவரது மகுடம் கலை இலக்கியக் காலாண்டிதழ் ஈழத்தின் மிகச்சிறந்த இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருகிறது. அது ஒவ்வொரு இதழ்களையும் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளின் சிறப்பிதழாக வெளிக்கொணர்கிறது. இதற்கு பின்னால் மைக்கலின் உழைப்பு இருக்கிறது.இதே உழைப்பை இன்று தனது இரண்டாவதுகவிதை நூலை வெளியிடுவதிலும் காணமுடிகிறது.
கவிதை என்பது சொற்களின் விளையாட்டு. சரியான இடத்தில் சரியான சொற்களை அமைக்கத் தெரிந்தவனே உண்மைக்கவிஞன். கவிதையைப் போலவே புதிய புதிய சொற்களை படைக்கத்தெரிந்த கவிஞன் சிறந்த கவிஞனாகி விடுகிறான். அந்த வகையில் மைக்கல் கொலினின் கவிதைகளில் புதிய சொற்களின் அணிவகுப்பைக் காண்கிறோம். அவை உரிய இடத்தில் உரிய கருத்துக்களை தரும் வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
தனிமனித உணர்வுகளுடன் சமூக சிந்தனையையும் இணைத்த அவரது சமகால வாழ்வியலைக் கூறும் கவிதைகள் நிச்சயம் பேசப்படும் என்றார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. க. மகேசன் பிரதமதிதியாக கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் பேராசிரியர் சி. மெளனகுரு, மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்பரவலர் றஞ்சிதமூர்த்தி, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் திரு. ச. நவநீதன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவுச்செயலாளர் திரு. வெ. தவராஜா, வைத்தியர் சிவச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதல் பிரதியை தீவா கட்டிட நிர்மாண நிறுவக இயக்குனரும் உரிமையாளருமான திரு. M. திவாகர் அரச அதிபரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் நூல்விமர்சனத்தை கவிஞர் விமர்சகர் லலிதகோபன் ஆற்ற நன்றியுரையை கவிஞர் வி. மைக்கல் கொலின் ஆற்றினார்.
நிகழ்வை கவிஞர் எழில் வண்ணன் தொகுத்து வழங்கினார்.
இதனை மகுடம் கலை இலக்கிய வட்டம் தனது 37வது பெளர்ணமி நிகழ்வாக ஒழுங்குசெய்திருந்தது.