யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாழ் மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டதோடு அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுதிட்டங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மேலும், நீண்டகாலமாக இடம்பெயர்ந்து சொந்தக் காணியற்ற நிலையில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருபர்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.