நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் மேல், தென், மத்திய, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும், பிற்பகல் வேளைகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்துக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி மாவட்டத்தின் நியாகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் பத்தேகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, தொடங்கொட, அகலவத்த, மத்துகம, புளத்சிங்ஹள மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனர்த்தங்கள் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மக்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுநாயக்க, பஸ்யால, கம்பளை, பிபிலை, கொக்நஹர மற்றும் தம்பட்டை ஆகிய பிரதேசங்களில் நாளை மதியம் 12.09 அளவில், சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.