நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல் எழுப்பப்படுகையில் தமிழ் பிரதிநிதிகள் மெளனம் காப்பதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக இன்று (சனிக்கிழமை) முதல் தடவையாக கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பை நடத்திய அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “இப்போது நாடாளுமன்றத்தில் எனக்கு எதிர்ப்பு வருகின்றபோது எமது தமிழ் பிரதிநிதிகள் பலர் மௌனிகளாக இருக்கின்றார்கள். நான் பேசுவது அவர்களுக்காகவும்தான் என்பதை மறந்து நிற்கின்றார்கள்.
உலகின் மூத்த மொழி, செம்மொழி தமிழ் என்பது இந்தியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் ஏற்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் இதனைக் கூறியுள்ளார்.
ஆனால், தென்னிலங்கையில் இருப்பவர்களுக்கு அது தெரியவில்லையா? தெரியாததைப் போல் நடிக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். நான் அன்று, தமிழ் உலகில் மூத்த மொழி, தமிழர்கள் இந்த நாட்டின் மூத்த குடிகள் என்று சொன்னேன்.
தமிழர்கள் இந்த நாட்டிலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு இலக்கியங்கள், தொல்பொருள் கல்வெட்டுக்கள் என பல ஆதாரங்கள் உள்ளன. இதனை ஆதாரங்களுடன் முன்வைத்தேன். பேராசிரியர் ஒருவருடைய கருத்தை முன்வைத்தேன்.
அதற்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் போர்க்கொடி தூக்கிவருகிறார்கள். அவர்கள் இவ்வளவு காலம் செய்துவந்த மோசடி, வெளியில் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். அதனால்தான் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள். அவர்கள் தமது வரலாற்றை புனைந்து பேசுகின்றார்கள்.
நாமோ, எங்களுக்கு உள்ள வரலாற்றை இதுவரை காலமும் பேசாமல் இருந்துவிட்டோம். இந்த உண்மைகளை நான் பேசுவது நாட்டைப் பிரிக்க அல்ல. இனப் பிரச்சினையில் இனியாவது சிங்கள மக்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான்.
அப்படி நடந்தால் இலங்கைத் தீவின் அமைதிக்கு அது வழிவகுக்கும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. நெருக்குதல் ஒன்றதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது எனது கருத்து.
துரதிர்ஷ்டவசமாக எமது தலைவர்கள் எமது வரலாறு பற்றிப் பேசத் தயங்குகின்றார்கள். அவர்களுக்கு எமது வரலாறுபற்றி உண்மையில் தெரியாதா? அல்லது தெரிந்தும் மௌனிகளாக மாறிவிட்டார்களா? என்று எனக்குப் புரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.