இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது.
கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது.
வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு, வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகினறன.
இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் விசேட ஆராதனையுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.
குறித்த ஆராதனையினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை நடாத்தியதை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.
செங்கலடியில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் ஆரம்பமான இந்த பாதயாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமான பாதயாத்திரை சேற்றுக்குடா புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்று அங்கு விசேட பூஜையினை தொடர்ந்து வவுணதீவு ஊடாக ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்தினை சென்றடையவுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.