இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “எனது வளர்ச்சியைக்கண்டு பயந்து முன்னெடுக்கப்பட்ட என்மீதான விமர்சனங்களையெல்லாம் கடந்து மக்களின் பேராதரவுடன் தமிழரசுக் கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் தெரிவுசெய்யப்பட்டேன். அதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வருங்காலத்தில் தமிழ் தேசியத்தினை அடைவதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
சில கட்சிகள் இளைஞர்களை பொய்கூறி தவறான பாதையில் சென்று அவர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆனால், நாங்கள் எவ்விதமான பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. தமிழ் தேசியம் என்ற இலக்கினை நோக்கிய செயற்பாடுகளையே நாங்கள் மேற்கொண்டுவந்தோம்.
இந்த அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டத்தினை மிக அவசரமாகக் கொண்டுவந்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நபரை இலக்காகக் கொண்டு, இந்தச் சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நான் உணர்கின்றேன். நாங்கள் எந்தச் சட்டத்தினை எதிர்க்காட்டாலும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்.
மத்திய வங்கியில் கொள்ளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டபோதுகூட அதனை இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள்தான் அது தொடர்பாக அதிகமாகப் பேசினர். மத்திய வங்கியின் கொள்ளையுடன் தொடர்புபட்டதாக கருதப்படும் அர்ஜுன் மகேந்திரன் என்பவர் சிங்கப்பூரினதும் இலங்கையினதும் பிரஜாவுரிமையினைக் கொண்டிருந்த காரணத்தினால் அந்த கொள்ளை தொடர்பாக விசாரணை செய்வதற்குக்கூட அவரை இலங்கைக்கு கொண்டுவர முடியாத நிலையே இருக்கின்றது.
எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவர் ஏதாவது சிக்கலில் சிக்கும்போது அவர் வேறு ஒரு நாட்டில் இருந்தால் அவரை விசாரணைக்குக் கூட இங்கு கொண்டுவரமுடியாத நிலையேற்படும். இது தொடர்பாக நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.