அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகிய நியூ டயமன்ட் என்ற கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கடல் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தூரத்தில் விபத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை பாதுகாப்புத் தரப்பு, இந்திய தரப்புக்களின் தீவிர போராட்டத்துக்கு மத்தியில் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் ALP Winger டக் என்ற படகு, விபத்துக்குள்ளான கப்பலை 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) வரை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.
இதேவேளை, ஆழ்கடல் காற்று காரணமாக அவ்வப்போது தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளாவதாக தெரிவிக்கப்படுவதுடன் அவை டக் படகுகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் இதற்காக ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான மூன்று மற்றும் மூன்று துரித தாக்குதல் கப்பல்கள், இலங்கை கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி-1 (TTT One) டக் படகு ஆகிய இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
அதேபோல், இலங்கை விமானப் படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் மற்றும் பீச் கிராஃப்ட் ஆகியவை இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குகிறது.
மேலும், இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரண்டு டோர்னியர் விமானங்களும் அவசரகால பயன்பாட்டிற்காக மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
பேரழிவு நிவாரணத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனத்தை நியமிக்க கப்பலின் உரிமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிறுவனம் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.