20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றநிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டடுள்ளது.
குறித்த சட்டமூல வரைபு இன்று (வியாழக்கிழமை) காலை அரச அச்சகத் திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல பத்திரம் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் வர்த்தமானியில் வெளியிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
19ஆவது திருத்தச் சட்டத்தில் பிரதான விடயங்களாகக் காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்றும் விதிக்கப்பட்டது. அத்துடன் தகவலறியும் உரிமைச் சட்டம் வலுப்படுத்தப்பட்டது.
இவ்விடயங்களை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் முழுமையாகச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதற்கு அமைய அவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் இறுதிக்குள் அதனை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.