தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள புதிய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி கருத்துத் தெரிவிக்கும்போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், “சட்டம் இயற்றுவதற்காக நாடாளுமன்றத்துக்குச் செல்ல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்கள் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
குறிப்பாக வேட்பாளர்களுக்கு தங்களது விருப்பு இலக்கத்தை காட்சிப்படுத்த போதுமான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. கொரோனா தொற்று அச்சத்துக்கு மத்தியில் இந்த விடயங்களை கடந்த காலங்களிலும் பார்க்க தெளிவாக உணர்ந்துகொள்ள முடியுமாக இருந்தன.
அத்துடன், தேர்தல் சட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கின்றபடியால் வசதி குறைந்த வேட்பாளர்களுக்கு ஒருசில சந்தர்ப்பங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. வசதி படைத்தவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து ஊடகங்கள் ஊடாகவும் வேறு வழிகளிலும் தங்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த முடியுமாக இருந்தபோதும் வசதி குறைந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. அதனால் வேட்பாளர்களுக்கு மத்தியில் சமமான பிரசார வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகின்றது.
அதேபோன்று, இம்முறை தேர்தல் சட்டமீறல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக நான்காயிரத்து 400 முறைப்பாடுகள் முகப்புத்தகத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சமூக வலைத்தலங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று, வேட்பாளர் ஒருவர் எந்தளவு தொகை செலவழிக்கலாம் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். இதன்மூலமே கோடிக்காணக்கான ரூபாய் வீணாகுவதைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் 9ஆவது நாடாளுமன்றம் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.