கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் ஓகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது என்றும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான சுகாதார ஏற்பாடுகள் அனைத்தும் பூரணமாகியுள்ளன.
மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்த பொதுத் தேர்தலின் ஊடாக, கொரோனா வைரஸ் பரவலை இல்லாது செய்வதுதான் எமது பிரதான இலக்காக இருக்கிறது.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது அதிகாரிகள் இதற்கான கடமைகளில் ஈடுபடவுள்ளார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவலானது சமூக மட்டத்தில் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
இலங்கையைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவலானது சமூக மட்டத்தில் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
வைரஸ் தொற்றாளர் ஒருவர் இருந்தால்கூட, அவர் ஊடாக இன்னொருவருக்கு வைரஸ் தொற்று பரவாத வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஒருபோதும் வாக்களிப்பு இடம்பெறாது. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வீடு திரும்பியவர்கள் மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்” என கூறினார்.