யாழ்ப்பாண மாநகர சபையின் சைவசமய விவகார குழுவினால் நல்லூர் முருகன் ஆலய உற்சவ காலத்தில் வெளியிடப்படும் ‘நல்லைக்குமரன்’ மலர் வெளியீடும் ‘யாழ் விருது’ வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
நாட்டில் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறையுடன் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவின் தலைவரும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருமான த.ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில், நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், சைவ சமயக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக சுவாமிகள் மற்றும் சைவ சமய விவகாரக் குழுவினரால் இவ்வருடத்திற்கான ‘யாழ் விருது’ கவிஞர் சோ.பத்மநாதனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பொற்கிளியினை யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் வழங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நல்லைக்குமரன் மலர் வெளியிடப்பட்டது. நல்லைக்குமரன் மலரின் முதல் பிரதியினை தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பிரதிநிதி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாநகரசபை துணை முதல்வர் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா கலந்துகொண்டார். யாழ் விருதினைப் பெற்றுக்கொண்ட கவிஞர் சோ.பத்மநாதன் ஏற்புரையினை நிகழ்த்தினார்.