கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயாரில்லை என் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர் என்ற நன்றியை மறந்து விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிப்பதாகவும் எதிராகச் செயற்படுவதாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாட்களாக விக்னேஸ்வரனுக்கு எதிராக செய்துவரும் விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் நாளை ஞாயிறுக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது அன்புக்குரிய தமிழ் மக்களே!
வாக்களிப்பு தினத்துக்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக ஒரு தெளிவான முடிவுக்கு நீங்கள் தற்போது வந்திருப்பீர்கள்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் அந்த நோக்கங்களை அடைவதற்கான எமது அணுகுமுறைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பாக தெளிவான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் உங்கள் முன்பு வைத்திருக்கிறோம். இதுவரை அதனை நீங்கள் படித்துப் பார்க்கவில்லையானால் தயவுசெய்து வாக்களிக்கச் செல்வதற்கு முன்னர் அதனைப் படித்துப்பாருங்கள்.
எமது பூர்வீக பகுதிகளான இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைப் பெறுவதே எமது நோக்கம். ஆனால், வரலாற்று படிப்பினைகளின் அடிப்படையிலும் சமகால உலக நடைமுறைகள், முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகள், பூகோள அரசியல், சர்வதேச உறவு கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தீர்வு தொடர்பாக சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நாம் கோருகின்றோம். அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும்வரை இடைக்கால தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எமது கோரிக்கை ஆகும்.
இதனை சாத்தியம் ஆக்குவதற்கும் எமது சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டை அடைவதற்கும் நிலத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி நிறுவன ரீதியான கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்படும் ஒரு அணுகுமுறையை முன்மொழிந்திருக்கின்றோம். இங்கு நாம் முதலீடு செய்யவிருப்பது எமது அறிவையே. ஆயுதங்கள்தான் இன்று தமிழ் மக்களிடையே மௌனிக்கப்பட்டிருக்கிறதே அன்றி அது எமது அறிவாற்றல் அல்ல.
முன்னரைவிட பன்மடங்கு பெருகி உலகம் பூராகவும் இன்று அது சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. இதனை கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியாக இனங்கண்டு பயன்படுத்தத் தவறியதுடன் ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்பட்டமையே எமது எல்லா பின்னடைவுகளுக்கும் காரணம் ஆகும்.
இந்த அறிவை நாம் எமது நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் சரியாகப் பயன்படுத்துவோமானால் வெற்றிகள் எம்மை நிச்சயம் தேடி வரும். இதற்கு தமிழ் அரசியல் கட்சிகளிடையே மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மத்தியிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாகும். நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது தெரியாது. ஆனால், எனக்குப் பின்னர் முகவர்கள் நுழைந்து தமிழ் தேசியத்தின் பாதை தடம்புரளாமல் இருக்கவேண்டுமானால் வலுவான நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் அவசியம்.
ஆகவே, புத்திஜீவிகளே, செயற்பாட்டாளர்களே! எம்முடன் ஒன்றிணையுங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன்.
இம்முறை தேர்தலில் பெரும் போட்டிகளும் பிளவுகளும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும், தமிழர் அரசியலை செப்பனிடுவதற்கும் கொள்கைகள் அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எமது மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலுமான ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த அரசியல் பரிமாணம் ஒன்றுக்கு இம்முறை தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.
தேர்தலுக்கு முன்னர் ஒத்த கொள்கை உடைய எல்லோரையும் ஒன்றிணைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் சிலர் இணைந்து செயற்பட முன்வரவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைவிட கட்சி நலன் முதன்மையாக இருந்தது போல் தெரிந்தது. நான் இன்றும் சொல்கிறேன் இத்தேர்தலின் பின்னர்கூட பலரை இந்தக் கூட்டணியுடன் இணைத்து முன்னோக்கிச் செல்லவே விரும்புகின்றேன்.
அதனால்தான், ஒத்த கொள்கை உடையவர்களை பலமாகத் தாக்கி எமக்குள்ளே பிளவுகளை ஆழமாக்காமல் பிரசாரம் செய்வதைத் தவிர்த்து வருகின்றேன். ஆனால், பரந்த ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான கருத்துக்கள் கூறப்பட்டுவருவதை நான் அறிவேன்.
இதேவேளை, தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் ஞாயிறுக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் எனக்கு எதிராக சில அவதூறுகளை வெளியிடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வெளியாகும் சில பத்திரிகைகளின் அட்டைப் பக்கங்களை விலைகொடுத்து வாங்கியிருப்பதாக அறிகின்றேன்.
தனது அவதூறுகளுக்கு நான் பதில் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருக்கும்வகையில் மிகவும் தந்திரமான நகர்வு என்று தான் கருதும் செயல் ஒன்றை அவர் செய்திருப்பதாக நான் அறிகின்றேன். தான் மட்டும்தான் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கும் இவர் எமது மக்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதையும் தனது சுத்துமாத்துக்கள் எமது மக்களிடம் இனியும் பலிக்காது என்பதையும் இன்னமும் உணரவில்லை போல் தெரிகின்றது.
இதே நபர் சில தினங்களுக்கு முன்னர் என்னை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தனை நான் நன்றி உணர்வு எதுவும் இன்றி அவருக்கு எதிராக செயற்படுவதாகவும் விமர்சனம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். நான் ஒன்றை அவருக்குக் கூறிவைக்க விரும்புகிறேன். அதாவது, அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட சலுகைகள் பணத்துக்காக அவர் வேண்டுமானால் சிங்களக் கட்சிகளுக்கு நன்றியுணர்வுடன் இருக்கட்டும்.
ஆனால், அந்த நன்றி உணர்வை என்னிடம் அவர் எதிர்பார்க்கக் கூடாது. நான் எனது மக்களுக்கே நன்றிக்கடன் பட்டுள்ளேன். கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய நான் தயார் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, எனதருமை மக்களே!
நாம் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகள், நல்வாழ்வு பாதுகாப்பு ஆகியவற்றுக்கான எமது பற்றுறுதியில் இருந்து தளரமாட்டோம். ‘மீனுக்கு’ புள்ளடி இட்டு நல்லதொரு மாற்றத்தை தமிழர் வாழ்வில் ஏற்படுத்தும் ஆயுதங்களாக உங்கள் வாக்குகள் மாறட்டும்!
எமது தமிழ் மக்களின் அரசியல் சமூக, பொருளாதார மாற்றுக்கும் கலாசார அபிலாஷகளை வென்றெடுப்பதற்கும் வலுவூட்டுவதாக அவை அமையட்டும்! இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அவை அமையட்டும்!
உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அவை அமையட்டும்! நிதி நிறுவனங்களை உருவாக்கி மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களை நிராகரிப்பதாக அமையட்டும்!
தமது பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை அழைத்து விருந்துகொடுத்தவர்களை விரட்டுவதாக அமையட்டும்! அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அவை அமையட்டும்!
இதேபோலத்தான் பெரும்பான்மையினக் கட்சிகளில் இருந்து இங்கு வந்து போட்டியிடும் வேட்பாளர்களை விரட்டி அடியுங்கள்! ஆகவே, மக்களே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், மீனுக்கு வாக்களியுங்கள்!“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.