இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம் எனவும் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்கான அதிகாரத்தையும், ஆணையையும், ஆதரவையும் இந்த தேர்தலின் ஊடாக வழங்கி தமது அரசியலின் பங்காளிகளாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தவகையில், வடக்கு- கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் தனது தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றியடையச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் இன்று (ஞாயிறுக்கிழமை) மாலை நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, அவர் கூறுகையில், “வாக்களிப்புக்கு இன்னமும் 3 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பிரசாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எமது இறுதி பிரசார கூட்டத்தில் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் இம்முறை தேர்தல் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது.
முதலாவதாக, வரலாற்றுப் பட்டறிவுகளின் அடிப்படையிலும் சமகால உலக நடைமுறைகளின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் தமக்கான இறுதி தீர்வு தொடர்பில் தீர்க்கமான ஒரு செய்தியினை வெளிப்படுத்தும் தேர்தலாக இம்முறை தேர்தல் அமைகின்றது. சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தாம் விரும்பும் தீர்வை ஏற்படுத்த ஆவன செய்யுமாறு சர்வதேச சமூகத்துக்கு ஒரு தீர்க்கமான ஒரு செய்தியினை சொல்லுவதற்கு எமது மக்கள் தயாராகி வருகிறார்கள்.
இலங்கையின் இன முரண்பாட்டு வட்டத்தில் இது ஒரு முக்கிய பரிமாணமாக மிளிர்ந்துள்ளது. எமது மக்களின் இந்த செய்தி, எமது பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் காலத்தில் இந்தியா, ஐ. நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் நகர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எமது நம்பிக்கை.
இரண்டாவதாக, தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஒரு ஆரோக்கியமான பரிமாணத்தை ஏற்படுத்தும் தேர்தலாகவும் இம்முறை தேர்தல் அமைந்துள்ளது. கடந்த காலங்களைப் போல அல்லாமல் வெறுமனே ஒற்றுமை என்ற கோசத்தின் அடிப்படையில் எமது மக்களை குருட்டுத்தனமாக வாக்களிக்கச் செய்த நிலைமையில் இருந்து அரசியல் கருத்து வினைப்பாட்டு (Political Discourse) செயன்முறையின் ஊடாக தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்வதற்கு இம்முறை தேர்தல் வழிவகுத்திருக்கிறது.
கட்சிகளின் கொள்கைகள், கோட்பாடுகள், அணுகுமுறைகள், பட்டறிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அறிவு ரீதியான, அனுபவ ரீதியான கலந்துரையாடல் அல்லது கருத்து வினைப்பாட்டை உருவாக்கி அதன் அடிப்படையில் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து எமது மக்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு இம்முறை தேர்தல் வழிவகுத்துள்ளது.
கடந்த இரண்டு மாத காலங்களில் பல்வேறு கட்சிகளினதும் பரப்புரைகள், தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள், கருத்துக்கள் உங்கள் சிந்தனையை தட்டிவிட்டிருக்கும். அவற்றை பகுத்தறிந்து உங்களுக்கு சரி என்றுபடும் ஒரு தீர்மானத்துக்கு நீங்கள் இப்பொழுது வந்திருப்பீர்கள்.
எமது நோக்கம் என்ன, அதனை அடைவதற்கான வழிவரைபடம் என்ன, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நீங்கள் ஏன் வாக்களிக்கக் கூடாது, அதனால் ஏற்படப்போகும் பாதிப்பு என்ன, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும், அதனால் ஏற்படப்போகும் நன்மை என்ன ஆகிய தகவல்களை, கருத்துக்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எமது பிரசார உரைகளிலும் அறிக்கைகளிலும் ஊடக நேர்காணல்களிலிலும் நாம் உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தி இருக்கின்றோம்.
இவைதவிர, எமது அரசியலை நேர்வழிப்படுத்தும், செம்மைப்படுத்தும் சில நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம். இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவம் மிக அவசியம்.
இதுவரை காலமும் நாம் இவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றபோதிலும் இனிமேலாவது இத்தகைய வழிகளில் எமது அரசியலை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இதற்கான சில முன்னுதாரங்களைச் செய்துள்ளது.
தேர்தலில் வெற்றிபெறும் எமது வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இது அரசியலை ஒரு வருமானம் ஈட்டும் கருவியாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதற்காக நாம் மேற்கொண்டுள்ள ஒரு முன்னற்பாட்டு நடவடிக்கை. நான் ஏற்கனவே எனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்திவிட்டேன். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படும் எல்லா வேட்பாளர்களும் தமது மாதந்த படியில் குறிப்பிட்டளவை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதும் எமது புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமக்குத்தான் எல்லாம் தெரியும். நாம் நினைத்தது தான் சரி என்று தன்னிச்சையாக செயற்படாமல் எமது புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்களை உள்வாங்கி நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாட்டை முன்னெடுத்து, ஆராய்ந்து அறிவு ரீதியாகவே எமது மக்கள் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
இவற்றைப்பற்றி உங்களுக்கு நாம் தெளிவாக எடுத்துக்கூறி இருக்கிறோம். இவற்றை முன்னெடுத்துசெல்வதற்கான அதிகாரத்தையும், ஆணையையும், ஆதரவையும் இந்த தேர்தலின் ஊடாக எமக்கு நீங்கள் வழங்கி எமது செயற்பாடுகளின் பங்காளிகளாக நீங்கள் இருக்கவேண்டும் என்று இந்த சந்தர்ப்பதில் வேண்டுகோள் விடுக்கின்றேன். வடக்கு கிழக்கில் எமக்கு ஒரு அமோக வெற்றியை நீங்கள் பெற்றுத்தர வேண்டும். இந்த வெற்றி எமது நீண்டகால அரசியல் போராட்டத்திலும், உங்கள் வாழ்க்கையிலும் நல்லதோர் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
எனதருமை மக்களே, எந்தவொரு வாக்கையும் பயன்படுத்தாமல் வீணடித்துவிடாதீர்கள். பயன்படுத்தப்படாத உங்கள் வாக்குகள் உங்கள் வாழ்க்கைக்கு எதிராக தொழிற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புலம்பெயர் தமிழ் மக்களே, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களே, உங்கள் உறவுகளை தொடர்புகொண்டு எதிர்வரும் 5ஆம் திகதி மறவாமல் வாக்களிக்கச் செல்லுமாறு கோருங்கள். அந்த வாக்குகளை மீனுக்கு அளிக்குமாறு கூறுவதற்கு மறவாதீர்கள்.
எனது வாழ் நாளின் பெரும்பகுதியில் நீதிமன்றங்களின் ஊடாக நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக ஒரு தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றேன். நீங்கள் வழங்கும் இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல மாற்றத்துக்கான திறவுகோலாக இருக்கும் என்பதிலும் முழு உலகத்தையும் உங்களை நோக்கி திரும்ப வைக்கும் என்பதிலும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.