தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.
குறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அக்கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசரமாகக் கூடினர்.
இக்கூட்டத்தில், தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.