திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள் 5 மணிக்கு நிறைவுபெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72.84 வீதமாக பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி ஐந்து இலட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 525 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் தற்போது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. இங்கு கொண்டுவரப்படும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் முறையான வகையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கென மொத்தமாக 74 வாக்கெண்ணும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 20இற்கும் அதிகமான அரசியல் கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இவற்றில் 55 சாதாரண வாக்கெண்ணும் பிரிவுகளும், தபால் மூல வாக்குகள் எண்ணுதற்காக 19 பிரிவுகளும் செயற்படும்” என அவர் தெரிவித்தார்