கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமையின் விளைவாக நாடளாவிய ரீதியில் 16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் குறைந்தது ஒரு வாரத்திற்கேனும் தேர்தல் பிரசார கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை அவர்கள் உதாசீனப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
எனவே சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் துரிதமாக வர்த்தமானிப்படுத்தப்பட்டால் மாத்திரமே இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.
மேற்கூறிய விடயங்களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் புதன்கிழமை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் வர்த்தமானிப்படுத்தப்பட்டால் சட்டதை மீறும் செயல்களின் அடிப்படையில் எம்மால் ஏதேனுமொரு நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த சந்திப்பின்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை சுகாதார பாதுகாப்புடன் நடத்துவது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டதோடு பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள தொழில் ரீதியான சில இடர்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.