யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவராலேயே கட்டப்பட்டதாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலை, திருக்கோணேச்சர ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த அவர், இவற்றுக்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
என்றபோதும் தாம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழர்களின் ஆலயங்களை உரிமை கோரமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிதைவடைந்துள்ள தொல்பொருள் மரபுரிமையினை அடையாளப்படுத்தி அதனை பாதுகாப்பதே தமது பிரதான நோக்கம் என்றும் பௌத்த மத மரபுரிமைகளை மட்டுமன்றி பிற இனங்களின் மதம் தொடர்பான உரிமைகளும் செயலணியின் ஊடாக பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஆய்வு நடவடிக்கைகளின்போது கிடைக்கப்பெறும் தரவுகளைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்திகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ள மேதானந்த தேரர், வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துக்கேயரின் படையெடுப்பினால் அந்த விகாரை அழிக்கப்பட்டது என்றும் பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் உண்மையை அறிந்துகொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைவிட, கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
இதற்காக தாங்கள் நல்லூர் ஆலயத்தை உரிமை கோரவில்லை எனவும் இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இரு தரப்பு மத வழிபாடுகள் மற்றும் கட்டடக்கலை ஊடாக உறுதியாகின்றன என்றும் எல்லாவெல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.