‘என் கனவு யாழ்’ செயற்றிட்டத்தில் விவசாயத்தை முக்கியப்படுத்திய காரணம் விவசாயிகளின் குரல் இன்னுமும் மேலோங்க வேண்டும் என்பதற்காகவே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ ‘என் கனவு யாழ்’ எனும் செயற்றிட்டத்தில் விவசாயத்தை முக்கியப்படுத்திய காரணம் விவசாயிகளின் குரல் இன்னமும் மேலோங்க வேண்டும் என்பதற்காகவே.
விவசாயத்தின் மூலம் எமது எதிர்காலத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். மற்றைய பிரதேசங்களில் கிடைக்கும் வசதிகள் எமது விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும்.
எமக்கான சரியான உற்பத்தி விலை, மாற்று சந்தைகள் கிடைக்க வேண்டும். அதேநேரம் விவசாய தொழில் மயமாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய கூலியாக வேலைசெய்பவர்கள் என அனைவருக்கும் இந்த முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அவர்களின் குடும்பங்கள் முன்னேற்றகரமான நிலைக்கு வரவேண்டும். அவர்களுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியைப் பெற்றுக்கொடுத்து எமது எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புதலே எனது நோக்கம்” என்று தெரிவித்தார்.