மருத்துவர் என அடையாளப்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரியவருவதாவது, பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தின் மோரா பிரிவில் தேர்தல் பரப்புரைக்காக, சுயேட்சை வேட்பாளரான கே.ஆர்.கிரிஷான் நேற்று சென்றுள்ளார்.
அனுமதியின்றி மருத்துவ முகாமொன்று நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்கள் அங்கு சென்றுள்ளனர்.
மருத்துவ முகாமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என பொகவந்தலாவை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
இதனால், வேட்பாளரான கே.ஆர்.கிரிஷான் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.
தம்மை மருத்துவர் என அடையாளப்படுத்துவதற்கான எவ்வித ஆவணங்களும் அவரிடம் இருக்கவில்லை எனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனால் அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன், அவரிடமிருந்த சில மருந்து வகைகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.