இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமிதாப் பச்சனுக்கு 77 வயதான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுகுறித்து அமிதாப் பச்சன் ருவிற்றரில் தெரிவிக்கையில், “கொவிட்-19 பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எனது குடும்பத்தினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.