மேதானந்த தேரரின் கூற்றுக்களில் இருந்தே, தொல்லியல் செயலணி எந்த நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெளிவாக புலப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி எதற்காக நியமிக்கப்பட்டுள்ளது என்பதை மேதானந்த தேரர் கூறாமல் கூறிவிட்டார் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தை சிங்கள பௌத்த மக்களின் அடையாளம் என்று காண்பிக்கவே தமிழ் மற்றும் முஸ்லிம் சரித்திரவியலாளர்களைக் கொண்டிராத குறித்த செயலணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செண்பகப் பெருமாள் என்ற தமிழரை சிங்கள இளவரசர் சபுமல் குமாரயா என்று எமது தொல்லியலாளரான தேரர் அழைக்கிறார். மேலும், உண்மையை மறைத்து சிங்களவர் ஒருவர் நல்லூரை ஆண்டார் என்று கூறுவது எல்லாம் சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு கபட நாடகம் எனவும் விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.
அத்தோடு, மேதானந்த தேரர் திருக்கோணேஸ்வரம் பற்றிப் பிழையான தகவல்களைப் பரப்பப் பார்க்கின்றார் என்றும் திருக்கோணேஸ்வரம் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே, புத்தர் பிறப்பதற்கு முன்பிருந்தே, இலங்கையில் இருந்து வந்த சிவலிங்கத் தலங்கள் எனவும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இராமாயணம் பற்றிக் கூறி இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப் பார்க்க வாருங்கள் என்று மத்திய அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளைக் கூவி அழைக்கின்றது. தேரரோ நேற்று வந்த புத்த விகாரையின் இடத்திலேயே கோணேஸ்வரம் பின்னர் கட்டப்பட்டது என்கின்றார்.
வேண்டுமென்றே சிங்கள பௌத்த விகாரையின் இடத்தில் திருக்கோணேஸ்வரம் கட்டப்பட்டது என்று கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கப் பார்க்கின்றார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், இவரின் இந்த இரு கூற்றுகளில் இருந்தே ஜனாதிபதி செயலணியின் கரவான எண்ணங்கள் வெளிவந்துள்ளன என்றும் இவர் போன்றவர்கள் இந்த செயலணியில் இருந்துகொண்டு இராணுவ உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றப் போகின்றார்கள் என்று தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் சூழ்ச்சி பலித்தால் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று பெயர் பெற்றுவிடும் என்றும் தமிழர்கள் இலங்கையை ஆக்கிரமித்தார்கள் என்ற பொய்யான கூற்றை உலகம் பூராகவும் ஏற்றுக்கொள்ளச் செய்துவிடுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.