போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.
ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு தமது அரசாங்கத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது எனக் கூறினார்.
எனவே மக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றினை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
யுத்தத்தின் போது காணப்பட்ட பேரழிவு காரணமாக சுமார் 60 ஆயிரம் கல்வி ஆற்றல் உடைய இளைஞர்களை நாடு இழந்தது என்றும் பட்டதாரிகள் பெருமளவானோர் இந்த பேரழிவான சூழலில் கொல்லப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கை கிழக்கையும் வேறுபடுத்தி தனியொரு இராச்சியத்தை கட்டியெழுப்புவதற்காக முயற்சித்த போதும் தமது அரசாங்கத்தால் புலிகளின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழிற் பயிற்சிகளையும் தொழிநுட்ப கல்வியையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.