மாற்று அணி என கூறும் சி.வி.விக்னேஸ்வரன் கட்சிகூட தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுதாக தெரிவித்திருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னென்ன விடயங்களை எடுக்கின்றதோ அவ்விடயங்களிற்கு விக்னேஸ்வரன் ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயற்படுவார் என்று எழுத்து மூலமாக பகிரங்கமாகவே கூறிவருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு திருப்புமுனையான ஒரு தேர்தலாகும். திருப்புமுனையான தேர்தல் என்றவுடன் எமது தலைவிதியில் முன்னேற்றத்தை ஏற்படத்தக்கூடியது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அவ்வாறான ஒரு தேர்தல் அல்ல.
தமிழ் மக்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காமல் வேறு எந்தத் தரப்பிற்காவது வாக்களித்தால் சரித்திரத்தில் முதன்முறையாக நாங்களாகவே விரும்பி ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்குச் சமமானதாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோட்டபாய ராஜபக்ஷவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்தனர். அத்துடன் தேர்தலிற்கு பின்னர் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அந்த அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
தற்போது, தமிழ் மக்களின் உரிமையை முற்றுமுழுதாக அழிப்பதற்கு செயற்பட்டு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த குற்றத்தில் முதலாவது குற்றவாளியாக இருக்கின்ற கோட்டாபய மற்றும் மஹிந்த அணி இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தெற்கிலே பெறக்கூடிய ஆதரவை பெற்றிருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் 99 சதவீதம் ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்ற நிலையிலே அந்த தரப்புடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதுடன் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெறவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை, இன்று மாற்று அணி என்று கூறிக்கொண்டு இருக்கின்ற விக்னேஸ்வரன் கட்சிகூட தேர்தல் முடிந்த பின்பு நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசையை உயிருடன் வைத்திருக்க தமிழ் மக்களிற்கு நடந்த இனப் படுகொலைக்கு நேர்மையான நீதிகோரி சர்வதேச குற்றவியல் விசாரணையை முன்னெடுப்பதற்கான முயற்சியை எடுப்பதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு ஈழத் தமிழருக்கு இருக்கின்ற ஒரேயொரு தெரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இத்தேர்தலில் எமது மக்கள் மீண்டும் ஒருமுறை பிழை விட்டால் அப்பிழை நிரந்தரமான ஒரு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.