புளொட் அமைப்பின் 31ஆவது வீரமக்கள் தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- நாவற்குடாவில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில், அதன் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய மு.ஞானப்பிரகாசம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் உப.தவிசாளரும் டெலோ அமைப்பின் உப.தலைவருமான பிரசன்ன இந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம், புளொட் அமைப்பின் மட்டக்களப்பு செயற்பாட்டாளர்களான மண்முனை மேற்குப்பிரதேச சபையின் உபதவிசாளர் பொ.செல்லத்துரை, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா, ந.ராகவன், போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் நா.தருமலிங்கம், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து, கா.கமலநாதன் உட்பட கட்சியின் தோழர்கள், அபிமானிகள், உயிர்நீத்த தோழர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உயிர்நீத்த தோழர்களின் உருவப்படங்களுக்கு ஈகைச் சுடரேற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.