எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு தாக்குதல் நடத்தாது மாற்று வழிகளூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
முன்னிலை சோசலிசக் கட்சியினரால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது கூறினார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு சமூக இடைவௌியை பேணுதல் கட்டாயமானதாகும் என்றும் இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு பெற்றிருந்தபோதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையால் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஒழிப்பிற்கான கட்டாய நிபந்தனையாக சமூக இடைவௌியை பேணுதல் காணப்படுகின்றதாக கூறிய அமைச்சர், ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளமையையும் மீறி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது கலைந்துசெல்லுமாறு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனாலும் ஆர்ப்பாட்டகாரர்கள் தொடர்ந்தும் அங்கு செயற்பட்டமையால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மீதே முதலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கான ஔிப்பதிவு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் எதிர் தாக்குதலை பொலிஸார் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியோ, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களோ பொலிஸாருக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் கவலையடைவதாகவும் பந்துல குணவர்தன இதன்போது குறிப்பிட்டார்.
இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருப்பதற்கு ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மாற்றுவழிகளை திட்டமிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர், கொரோனா ஒழிப்பிற்கான தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய எதிர்ப்பில் ஈடுபடுவோர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.