தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த ஒரு நாள் அடையாள அட்டை வழங்கும் சேவையை இம்மாதம் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
திணைக்களத்தின் வளாகத்தில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக பெருமளவான பயனாளர்கள் ஒன்றுகூடும் நிலைமையை ஆராய்ந்து அதற்காக முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத் திட்டங்களின் கீழ் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, நாளொன்று பிரதான காரியாலயத்திற்கு வருகை தரவேண்டிய பயனாளர்களின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, காலியில் அமைந்துள்ள தென் மாகாண காரியாலயத்தில் நாளொன்றுக்கு 50 பயனாளர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு நாள் சேவை மூலம் அடையாள அட்டையைப் பெற எதிர்பார்த்துள்ளவர்கள் தமது விண்ணப்பப் படிவத்தை கிராம சேவகர் மூலம் உறுதிப்படுத்தி அதனை உரிய பிரதேச செயலகத்தின் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
அதன்பின்னர், பத்து நாட்களுக்குள் தாம் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான நாள் மற்றும் நேரம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உரிய தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் திணைக்களத்திற்கு வருகைதர வேண்டும் என்பதோடு குறித்த நேரத்திற்கு வருகை தராவிட்டால் மீண்டும் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தினம் மற்றும் நேரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உடையவர்களுக்கு ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.
அத்தோடு திணைக்களத்திற்கு வருகை தரும் அனைத்து சேவை பெறுநர்களும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதோடு முகக் கவசம் அணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும்” என்று குறிப்பிட்டார்.