கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கியும் காணப்பட்டதுடன் விடுதலைப்புலிகளின் சீருடையும் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவன ஊழியர்களால் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில்விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் குறித்த இடத்தில் அகழ்வினை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியை கோரியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அகழ்வுப்பணிகளை 26 ஆம் திகதி மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.
குறித்த மனித எச்சங்கள் பெண்களினுடையதாக இருக்கலாம் எனவும், அவை விடுதலைப்புலிகளினுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதி எனவும் குறிப்பிடப்படுகின்றது.