அயோனியன் தீவில் இருந்து கனடா இராணுவத்துக்கு சொந்தமான சிகோர்ஸ்கி சி.எச். 124 ரக ஹெலிகொப்டர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது.
ஹெலிகாப்டரில் நேட்டோ படை வீரர்கள் 6 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு இராணுவ ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, அயோனியன் தீவில் இருந்து 60 நாட்டிக்கல் தொலைவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து நேட்டோ படைக்கு சொந்தமான படகுகள், தீவிர மீட்பு பணியில் களமிறங்கின. இதன்போது ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. எனினும் மேலும் மற்ற 5 பேரும் மாயமாகியுள்ளனர்.
இவர்களின் நிலமை என்னவென்று தெரியாத நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், கிரேக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள அயோனியன் தீவில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.