டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த வாரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 100 ஆக இருந்தது. இது 90 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடித்தால் டெங்கு நோயினை ஒழித்ததை போல கொரோனா வைரசையும் ஒழித்து விடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, சமூக விலகலை கடைப்பிடிக்காத பகுதிகள் மீண்டும் சீல் வைக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளும் திரும்ப பெற நேரிடும் என்று அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
டெல்லியின் அனைத்து 11 மாவட்டங்களும் சிவப்பு மண்டலங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் மத்திய அரசு அளித்த அனுமதியின்படி, ஊரடங்கு தளர்வுகளை நடைமுறைப்படுத்த டெல்லி அரசு முடிவு செய்தது. இதனால் அத்தியாவசிய தேவைகள் அல்லாத கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.