யாழ். மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்.
‘சாவகச்சேரியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். புத்தளத்தைச் சேர்ந்த சந்தேக நபர் சாவகச்சேரியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் சங்கிலிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பருத்தித்துறையில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்புடையவர் என்று அறியப்பட்டது.
அத்துடன், கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கல் ஒன்றால் தாக்கிய சம்பவத்துடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்’ என்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.