ராசிபுரத்தில் கடந்த இருபது நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், திம்மநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் லொரியில் வந்த கூலி தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நாமகிரிப்பேட்டை மற்றும் பில்லாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதவேளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவிக்கும்போது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 பேரில் 36 பேர் கோயம்பேடு காய்கறி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கவனத்துடன் இருக்குமாறு கூறியுள்ளார்.
மேலும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் லொரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த லொரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் ஆலங்குளம் தாலுகா பகுதிகள் அனைத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் திகதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மத்திகிரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மூன்று பேர் வந்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மூன்று பேரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.