வங்கிகளில் தான் பெற்ற 100 சதவீத கடன்களை திருப்பி செலுத்துவதாகவும், தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் எனவும் தொழிலதிபர் விஜய் மல்லையா மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்நடவடிக்கைகளை பாராட்டி ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள விஜய் மல்லையா மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “கொரோனா வைரசிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு 20 இலட்சம் கோடி ரூபாய்கான திட்டங்களை அறிவித்ததற்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். ஆனால் என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச் செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது.
நான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன். நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.