அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார்.
ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்பட்டார்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்துள்ள அவர் 1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றினார்.
பின்னர் 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட அவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்த அவர், பல அமைச்சு பதவிகளை வகித்ததுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.