இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 ஆவது தேசிய நினைவுதின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் படையினருக்கு எதிராக எடுக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
“இதுபோன்று, ஒரு சிறிய நாட்டில் நம்முடைய படை வீரர்கள் எவ்வளவு தியாகம் செய்தார்கள், எவரும் அல்லது எந்த அமைப்பும் அவர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கவோ துன்புறுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன்.
நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தில் அப்பாவி பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொல்லப்பட்டனர்.
பேருந்துகள், ரயில்கள் மற்றும் கட்டிடங்களை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பு ஆகியன மூலம் பல உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் பெரும் சொத்து சேதத்தை ஏற்படுத்தியது.
நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் இனங்களுக்கும் சமமாக வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.