இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் வதிவிடத்தில் பூதலுடல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணன், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க உட்பட மேலும் பல அரசியல்வாதிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
ஈடுசெய்ய முடியாத இழப்பு – சம்பந்தன் கருத்து
அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடங்களிடம் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன், “அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கென தனியான அரசியல் வரலாறு இருக்கின்றது. இலங்கையிலுள்ள அனைவரினதும் மதிப்பை பெற்ற அரசியல் தலைவர் அவர். அவருடன் நீண்டகாலமாக நெருங்கி பழகியிருக்கின்றோம். இவ்வாறுதான் மறைந்த ஆறுமுகன் தொண்டமானும் எம்முடன் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டார்.
மலையக மக்களுக்கு தன்னால் இயன்ற விடயங்களை செய்துவந்தார். அவரது இழப்பு பேரிழப்பாகும். அது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மிகவும் வேதனை அடைகின்றேன்.
அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மனைவி, பிள்ளைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான இந்திய தூதுவர், “நேற்று மாலை 2 மணியளவில் திரு.ஆறுமுகன் தொண்டமானும் சுமார் ஒரு மணிநேரம் சந்திப்பு நடத்தினேன். மிகவும் பயனுள்ள சந்திப்பாக அமைந்திருந்தது. ஐந்து 5 நேரத்துக்கு பின்னர் அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்தது. அவர் மறைந்துவிட்டார் என அறிந்ததும் வேதனை அதிர்ச்சியடைந்தேன்.
மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்திய வம்சாவளி மக்களின் தலைவர் என்ற வகையில் அக்கறையுடன் கலந்துரையாடினார். அன்னாரின் குடும்பத்தினருக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட நாம் பங்காளர்களாக இருப்போம். தொண்டமானின் கனவு நனவாகும்.” – என்றார்.
அதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன், “அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்கள் வழி நடத்தினார். அவரை தொடர்ந்து மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை வழங்கினார். அவரின் இழப்பு மலையக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அந்த இடைவெளியை எவராலும் நிரப்பமுடியாது.
அரசாங்கமாக இருந்தாலும், கம்பனிகளாக இருந்தாலும் தீர்மானமொன்றை எடுத்துவிட்டால் அதனை நிறைவேற்றுவதில் துணிச்சல்மிக்க தலைவராக செயற்பட்டவர். அவரின் இழப்பு பெரும் வேதனையை தருகின்றது.” – என்றார்.