முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை அன்றைய தினம் காலையில் நாட்டுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தவகையில், மரக் கன்றுகளை யாரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கந்தையா இராஜதுரை (0718584882), வவுனியா மாவட்டத்தில் விநாயகமூர்த்தி குககேசன் (0775024784), மன்னார் மாவட்டத்தில் ஆறுமுகம் செல்வேந்திரன் (0774349363), முல்லைத்தீவு மாவட்டத்தில் நடனசாபாபதி வன்னியராஜா (0775027674), கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி பரிமளராஜ் (பாமகன்) (0776550030), திருகோணமலை மாவட்டத்தில் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) (0753113541), மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.உதயராஜ் (0779080697, 0713109938) ஆகியோரின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில், “எமது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இந்த மரம் நாட்டும் பணியில் அன்றைய தினம் ஈடுபடுவார்கள்.
கொரோனா வைரஸ் சம்பந்தமாக தரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மனதிற் கொண்டு அவற்றிற்கு அமைவாக பயன்தரு மரம் நாட்டல் செயற்பாட்டை முன்நடத்துங்கள்! அதுமட்டுமன்றி எமது மக்கள் யாவரும் வரும் மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் (18-18-18) நீங்கள் இருக்கும் இடங்களில் 2009 மே மாதம் இதே தினத்தன்று முள்ளிவாய்க்காலில் மரணித்தோர் நினைவாக விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்ய வேண்டுகின்றோம்.
அரசாங்கப் படைகள் அன்று செய்த கொடூரமான மனிதாபிமானமற்ற செயலை இன்றும் நாம் கண்டிக்கின்றோம் என்பதுடன் இந்த மனோநிலையுடன் அன்று எமது மக்கள் யாவரும் மாலையில் விளக்கேற்ற வேண்டும் என்று பணிவன்புடன் நாம் கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டார்.