கொரோனா தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர சென்னையை பகுதிவாரியாக பிரித்து திட்டங்கள் தீட்டப்படுவதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதிவாரியாக பிரித்து திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்திற்கு தனித்திட்டம் உள்ளது. ராயபுரத்தில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள 10 பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு தொடர்பு காரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக பாதிப்பு உள்ளது. பொது மக்கள் அச்சப்படாமல் விழிப்புடன் செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நாட்டிலேயே சென்னையில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 50 இலட்சம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை சமுதாய கூடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.