நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 927 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 2,872 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,752 லிருந்து 2872 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் 53,946 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 9,33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 34,108 போ் குணமடைந்துள்ளனா்.
மேலும் கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 30,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, 7,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து குஜராத்தில் 10,988 பேரும் தமிழ்நாட்டில் 10,585 பேரும் டெல்லியில் 9,333 பேரும் ராஜஸ்தானில் 4,960 பேரும் ஆந்திராவில் 2,355 பேரும் தெலுங்கானாவில் 1,509 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 80% கொரோனா தொற்று பாதிப்பு 30 நகராட்சி பகுதிகளில் இருந்தே வந்துள்ளதாக சுகாதாரத்துறை கணித்துள்ளது.