ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செயற்திட்டம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் திட்டம் ஏதும் இல்லை.
6 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருந்தும் 45 இலட்சம் நிறுவனங்களுக்கு நிவாரணங்களை அறிவித்திருப்பது கவலையளிக்கிறது.
வேலையிழப்பும், வருமான இழப்பும் தாண்டவமாடும் இந்த நேரத்தில் குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நேரடியாக பணமாக வழங்கிடும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்