இந்நிலையில், இச்சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பும், தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரன்ட் (TRF) என்ற அமைப்பும் உரிமை கோரியுள்ளன.
குப்வாரா மாவட்டத்தில் ஹன்ட்வாரா பகுதியில் நேற்றிரவு முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.
ஹன்ட்வாராவில் நேற்று இரவு ஒரு வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் இருவர், அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இந்நிலையில் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
8 மணிநேரத்துக்கும் மேலாக இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் இந்தச் சண்டையில் இராணுவத்தின் மேஜர், கேர்ணல், 21 ராஷ்ட்ரிய ரைபிள் படையின் 2 வீரர்கள், ஜம்மு காஷ்மீர் பொலிஸ் துணை ஆய்வாளர் ஆகியோர் உயிரிழந்தனர். அத்துடன், இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, சண்டை நடந்துகொண்டிருந்த போது, பாதுகாப்புப் படையினருக்கு தொலைப்பேசி மூலம் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு தெரிவித்தது.
அதேசமயம், தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரன்ட் அமைப்பினர் தங்களின் தாக்குதலுக்கு பொறுப்பேற்று தாக்குதலில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இரு தீவிரவாத அமைப்பினரும் பொறுப்பு ஏற்றுள்ளதால், ஏதாவது திசைதிருப்பும் வேலையா என பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த இரு அமைப்புக்களும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் உதவியுடன் இயங்கிவருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.