கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிரா, மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மே 31ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அங்கு 30,70 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 3ஆம் கட்டமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 4ஆம் கட்டமாக ஊரடங்கு மேலும் நீடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை, பஞ்சாப்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் 31ம் திகதிவரை நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு கொண்டுவந்தது.
அதனடிப்படையில் இதுவரை 3 கட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 3 கட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் 31ம் திகதி வரை தொடரும் என ஏற்கெனவே மணிப்பூர் மாநிலம் அறிவித்துள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் அதே அறிவித்தலை விடுத்துள்ளார்.
காணொலி மூலம் நேற்று கருத்து தெரிவித்த அவர், “பஞ்சாப் மாநிலத்தில் 4ம் கட்ட முடக்கம் வரும் 18ம் திகதி முதல் 31ம் திகதி வரை தொடரும்.
ஆனால், மாநிலத்தில் எந்த 144 தடை உத்தரவும் இல்லை. கொரோனா வைரஸ் பாதித்த சிவப்பு மண்டலங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டும்தான் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும். பேருந்து போக்குவரத்து குறைந்த பயணிகளுடன், கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் படிப்படியாக இயக்கப்படும்.
18ஆம் திகதி முதல் அதிகமான தளர்வுகளை மாநில அரசு அறிவிக்க உள்ளதால், அதைப் புரிந்துகொண்டு சமூக விலகலைக் கடைபிடித்து மக்கள் நடக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் முற்றிலும் சீல் வைக்கப்படும், அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமே திறக்கப்படும். வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் திங்கட்கிழமை மாநில அரசு அறிவிக்கும்.
அதேசமயம், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இந்த ஆண்டு எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் உயர்த்தப்படாது. முடக்கம் வரும் 31ம் திகதி தொடர வேண்டும், ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பஞ்சாப் மாநிலத்துக்கு திரும்ப பஞ்சாப் மக்கள் 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளார்கள்.
இவர்கள் வருகைக்குப்பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அனைவரும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல கட்டணத்தை அரசே செலுத்தும்” என தெரிவித்துள்ளார்.