பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் ‘இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கும் பொருளாதார சவால்களை சமாளித்தல்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 இலட்சம் கோடி டொலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்ய 5 இலட்சம் கோடி டொலர் பொருளாதார தொலைநோக்கு திட்டத்துக்கு இப்போது புரட்சிகர பொருளாதார அணுகுமுறை தேவைப்படுகிறது. உடனடி ஊக்குவிப்பு சலுகைகள் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மையமாக வைத்து இதை அணுக வேண்டும்.
இதற்கு நல்ல தொடக்கமாக பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய சார்பு கொள்கை அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தனி நபர் வருவாய் குறையும். 13.5 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படும்.
12 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சரியும். எனவே நலிவுற்ற பிரிவினருக்கும், சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தரும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.