வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், தமிழகத்தில், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம் வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும்.
இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வட மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது“ என்றுள்ளார்.